logo
home வழிபாட்டுத் தலங்கள் ஜனவரி 15, 2019
மலேசிய முருகன் நாடுகடந்து அருள்புரியும் பத்துமலை அழகன்
article image

நிறம்

குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான் என்று ஆன்றோர்கள் சொன்ன வாக்கு. சிவனின் மகனான முருகனுக்கும் தமிழர்களுக்கும் இருக்கக்கூடிய தொடர்பு என்பது வரலாற்றுக் காலத்திற்கு முற் பட்டதாகும். தமிழர்களின் பண்பாட்டோடும் மொழியோடும் தத்துவத்தோடும் பழக்க வழக்கங்களோடும் பின்னிப் பிணைந்திருந்த தன்மையைச் சங்ககால இலக்கியங்களான திரு முருகாற்றுப்படை , பரிபாடல் என்பன மிகச் சிறப் பாக விளக்கிக் கூறியுள்ளது. இந்த ஆன்றோரின் வாக்கை நிருபிக்கும் வகையில் மலேசிய நகரில் எழுந்தருளியுள்ள பத்துமலை முருகன் உலக அளவில் பேசப்படும் மிகவும் அற்புதமான தலமாக விளங்குகிறது. இயற்கை கொஞ்சும் மலையும், சிறுசிறு விலங் கினங்களுடன் சேர்ந்தவாறு அமைந்த அற்புத தலம்தான் மலேசியாவில் அமைந்துள்ள பத்து மலை முருகன் கோயிலாகும். முருகவழிபாடு என்பது இயற்கையை ஒன்றிய வழிபாடாக இருந்து வருகிறது. இதை பரிபாடலில் மிக அழகாக கூறப்பட்டுள்ளது. “மாக்கடலினின்று நிவர்தெழுந்த இளஞாயிற்றின் இயற்கை அழகில் உள்ளந் தோய்ந்த அன்பர்கள் அதனையே இறையென வழிபட்டு வணங்கினர். அதுவே பின்னர் நீலமயில் மீது வீற்றிருக்கும் செவ்வேள் வழிபாடாக மலர்ந்தது” என்று மிகவும் அற்புதமாக கூறப்பட்டுள்ளது. முருகனை மலைக்கடவுளாகவும், தமிழ்க் கடவு ளாகவும் வழிபடுகின்றனர் நமது முன்னோர். மலையின் இயற்கை அழகும், தமிழின் இனிமையும் கலந்ததால் முருகன் என்றும் அழகனாகவே காணப்படுகின்றான். மக்களின் வாழ்வு முதன்முதற் தொடங்கப்பட்ட இடம் மலை என்பது அறிஞர் கருத்து. ஆதிகால மனிதர் குன்று சார்ந்த குறிஞ்சிப் பகுதிகளில் வாழ்ந்த காலத்தில் முருகன் கடவுளாகப் படைக்கப்பட்டிருக்கலாம் என்பர். இதனையே “விண்பொரு நெடுவரை குறிஞ்சிக்கிழவ” என்று திருமுருகாற்றுப் படையில் நக்கீரர் குறிப்பிடுகின்றார். ‘அமரர் இடர் தீர்த்தே அவக்கருளும் வெற்றிக் குமரனடி சிந்திப்பாய் சடர்ந்து’ என்கின்றது சைவநெறி. “என்னிருளைநீக்கம் இமையோக் கிடர்க்கடியும் பன்னிரு தோட் பாலன் பாதம்’’ என்கின்றது சங்கற்ப நிராகர ணம். முருகனுக்கும் தமிழர்களுக்கும் இருந்த இறுக்கமான பிணைப்பினை முருகன், ‘கந்தன்’ என்றும் ‘வேலன்’ என்றும் ‘குகன்’ என் றும் அழைக்கப்படுவதில் இருந்து அறிந்து கொள்ள முடியும். பதினெட்டு மெய்கள். ஆறு முகங்களும் ஆறு இன எழுத்துக்கள். அவனது வேலே ஆயுத எழுத்து “முருகு” என்ற சொல்லில் ‘மு’ மெல் லினம் ‘ரு’ இடையினம் ‘கு’ வல்லினம் என்று சொல்கின்றனர் தமிழறிஞர்கள். தமிழகத்தில் முருகப்பெருமானுக்கு ஆறு படைவீடுகள் அமைந்துள்ளதைப் போல், மலேசிய நாட்டிற்கு மூன்று படைவீடுகள் புகழ்பெற்றவையாக விளங்குகின்றன. அவை பத்துமலை, தண்ணீர்மலை, கல்லு மலை ஆகும். முருகன் இருக்குமிடத்தை மட்டுமல்ல, முருகனின் பார்வைபடும் இடம் சிறப்படையும் என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்குவது பழனி மலையாகும். பழனி முருகன் பார்க்கும் திசையில் கேரளா மாநிலம் அமைந்திருப்பதால் அந்த மாநிலம் செழிப்பாகவும், சிறப்பாகவும் இருப்பதாக கேரள மக்கள் நம்பிக்கை, இதனால், தைபூசம் போன்ற முருகனுக்கு சிறப்பு வாய்ந்த நாட்களில் கேரள மக்கள் இருமுடி கட்டி பழனிமலைக்கு வந்து செல்கின்றனர். முருகனின் பார்வைக்கே இவ்வளவு சக்தி என்றால், முருகனின் பிரம்மாண்ட கோவில் அமைந்துள்ள மலோசியாவிற்கு எண்ணற்ற புகழ் கிடைப்பதில் அதிசயம் ஒன்றுமில்லை... முருகன் ஆலயங்களில் புகழ்பெற்றதாகவும், உலக அளவில் பிரசித்தி பெற்ற முருகன் ஆலய மாகவும் பத்துமலை முருகன் ஆலயம் திகழ்வதில் வியப்பொன்றும் இல்லை. இந்தக் கோயில் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து 13 கி.மீ வடக்கே, கோம்பாக் மாவட்டத்தில் உள்ளது. 1860-ஆண்டுகளில் பத்துமலைப் பகுதிகளில் வாழ்ந்த சீனர்கள் காய்கறி பயிரிட்டு வந்தனர். அவர்களுடைய விவசாயத்திற்கு உரம் தேவைப் பட்டது. ஆகவே, அவர்கள் பத்துமலைக் குகை களிலிருந்து வௌவால் சாணத்தைத் தோண்டி எடுத்துப் பயன்படுத்தி வந்துள்ளனர். அதற்கு முன்னர் இந்தக் குகைகளில் தெமுவான் எனும் மலேசியப் பழங்குடியினர் வாழ்ந்து வந்தனர் என்று வரலாற்றுச் சான்றுகள் கூறுகின்றன. இவர்களும் பத்துமலையைத் தங்களின் புனிதத் தலமாகப் பயன்படுத்தி வந்துள்ளனர். 1878-இல் பத்துமலைப் பகுதிகளில் இருந்த சுண்ணாம்புக் குன்றுகளை ஆய்வு செய்த அமெ ரிக்க தாவரவியலாளர் வில்லியம் ஹோர்னடே என்பவர் பத்துமலையைப் பற்றி வெளியுலகத்திற்கு அறிவித்தார். பத்துமலையின் பெயர் புகழடைந்தது.அதன் பின்னர் 14 ஆண்டுகள் கழித்து 1891-இல் தம்புசாமிப் பிள்ளை அங்கு ஒரு கோயிலைக் கட்டினார். பத்துமலைக் கோயிலின் நுழைவாயில் ஒரு வேல் வடிவத்தில் இருந்தது அவரைப் பெரிதும் கவர்ந்தது. 1890-இல் தம்புசாமிப் பிள்ளை கோலாலம்பூரில் ஸ்ரீ மகா மாரியம்மன் கோயிலைத் தோற்றுவித்தார். 1891-இல் பத்துமலையின் குகைக்கோயிலில் ஸ்ரீ சுப்ரமணியர் சிலையை நிலைநாட்டினார்.1892-இல் இருந்து பத்துமலையில் தைப்பூசம் கொண்டாடப் பட்டு வருகிறது. 1920-இல் குகைக் கோயிலுக்குச் செல்ல மரக் கட்டைகளிலான 272 படிக்கட்டுகள் கட்டப்பட்டன. குகைக் கோயில் 100 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. ஒரு காலத்தில் ஓர் ஒற்றையடிப் பாதையில் சென்று மலையின் உச்சியில் இருக்கும் முருகப் பெருமானை வழிபட்டு வந்த காலம் மாறி இன்று உலக அளவில் புகழ்பெற்று விளங்குகிறது பத்து மலை திருத்தலம். இம்மலை சுண்ணாம்புக் கற்களால் ஊசிப் பாறைகள் கொண்டு உருவான இயற்கை குகை யாகும். இந்த மலையின் வயது நாற்பதுகோடி ஆண்டுகள் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். பத்துமலை அருகே ஓடும் கங்கை பத்து என்ற ஆற்றின் பெயரால் ஏற்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். எனவே இம்மலைக்கு பத்துமலை என்ற பெயர் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இவ்வாலயம் சுமார் 127 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது. கி.பி. 1891&-ம் ஆண்டு தமிழகத்தைச் சேர்ந்த கே. தம்புசாமி பிள்ளை, பத்துமலைக் குகையில் 400 அடி உயரத்தில் சுப்பிரமணிய சுவாமியின் வேலினை நிறுவி, வழிபாட்டினைத் தொடங்கினார். முருகனின் அருளும், பக்தர்களின் கோரிக்கைகள் வேண்டுதல்களை நிறைவேற்றிய முருகனின் புகழ் மலேசிய மக்களிடம் வெகுவாக பரவியதால், மலேசிய மக்கள் ஜாதி பேதமின்றி, இயற்கையின் தெய்வமான முருகன் மீது அதீத காதல் வயப்பட்டு இத்தலத்து இறைவனை வழி பட்டு செல்கின்றனர். வேலாக மட்டும் காட்சியளித்த பத்துமலை முருகன் சன்னதி பக்தர்களின் முயற்சி மற்றும் கோவில் நிர்வாகத்தினரின் பெரும் உழைப்பால்.பத்துமலை அடிவாரத்தில், விண்ணை முட்டுமளவு கம்பீரமாகவும், உலக அளவில் உயர்ந்த அளவான 140 அடி உயரத்தில் அமைக்கும் விதமாகவும், டான்ஸ்ரீ டத்தோ நடராஜா தலைமையில், 2006&ம் ஆண்டு ஜனவரி மாதம் உலகப்பிரசித்தி பெற்ற முருகனின் சிலை நிறுவப்பட்டது. இதை உருவாக்குவதற்கு மூன்று ஆண்டுகள் பிடித்தன. கட்டுமானச் செலவு 25 இலட்சம் மலேசிய ரிங்கிட். இந்தச் சிலையின் திறப்பு விழாவின் போது சுமார் ஒரு டன் எடை சாமந்திப் பூ மாலை சூட்டப்பட்டது. பளு தூக்கும் இயந்திரத்தின் உதவியோடு அந்த மாலை முருகப்பெருமானுக்கு அணிவிக்கப்பட்டது. பத்துமலை ஸ்ரீ சுப்ரமணியர் கோவிலின் கலை ஓவியத்தை கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பெறச் செய்ய முயற்சி நடந்து வருகிறது. இந்தச் சிலை ஏற்கனவே மலேசிய சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.சிலையை உருவாக்குவதற்கு 1,550 கன மீட்டர் கட்டுமானப்பொருள், 250 டன் எஃகு கம்பிகள், பயன்படுத்தப்பட்டுள்ளது. முருகன் சிலைக்கு தங்க நிறத்தில் பூசப்பட்ட வண்ணக் கலவை தாய் லாந்திலிருந்து வரவழைக்கப்பட்டதாகும் மொத்தம் 300 லிட்டர் தங்கக் கலவை பயன்படுத்தப்பட்டன. தமிழ்நாடு, திருவாரூரைச் சேர்ந்த சிற்பி ஆர்.தியாகராஜன் தலைமையில் முருகன் சிலை அமைக்கப்பட்டது. அவருக்கு உதவி யாக 14 சிற்பிகள் பணி புரிந்தனர். சிற்பி ஆர்.தியாக ராஜன் மலேசியாவில் பல ஆலயங்களை நிர்மாணித்துள்ளார். இந்தச் சிலை உலகின் பார்வையை தற்போது மலேசியாவின் பக்கம் திருப்பியுள்ளது. உலகி லேயே மிக உயரமான சிலை என்ற சிறப்பினையும் இந்தச் சிலை பெற்றுள்ளது. இந்த சிலையைக் காண்பதற்காகவே 2012ஆம் ஆண்டு தைப்பூசத் திருவிழாவில் 10 லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்குப் பின் நடைபெற்ற தைபூச விழாக்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வரு கிறது. உலகின் பல பகுதிகளில் இருந்து இத் தலத்து முருகனை வழிபட பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். கிருத்திகை போன்ற விஷேச தினங்களில் சிறப்பு தினங்களாக விளங்குகின்றன. இராமாயண குகை: பத்துமலையின் அடிவாரத்தில் கலைக்கூட குகை, அருங்காட்சியகக் குகையென இரு குகைக்கோயில்கள் உள்ளன. இந்தக் குகை மையங்கள் 2008 ஆம் ஆண்டு புதுப்பிக்கப்பட்டன. அவற்றில் முருகக் கடவுள் சூரவதம் செய்யும் காட்சிகள் அருங்கலை ஓவியங்களாக வரையப்பட்டுள்ளன. பத்துமலையின் இடது புறத்தில் இராமாயண குகை உள்ளது. இந்த இராமாயண குகைக்குச் செல்லும் வழியில் 50 அடி உயரம் உள்ள ஓர் அனுமார் சிலையைக் காண முடியும். அனுமாரை குலதெய்வமாக வழிபடுவோருக்காக அங்கே ஒரு கோயிலும் கட்டப்பட்டிருக்கிறது. இந்தக் கோயில் நவம்பர் 2001-இல் திறப்புவிழா கண்டது. இராமாயண குகையில் இராமரின் வாழ்க்கைத் தத்துவங்கள் அழகான ஓவியங்களில் சித்தரிக்கப்பட்டுள்ளன. தற்போது இந்த இடம் உலகின் மிகப்பெரிய சுற்றுலா தலமாகவும் விளங்குவது கூடுதல் சிறப்பாகும்.